Saturday, 8 February 2020

கட்டுச் சோற்றுக்குள் எலியை விட்டால் எப்படி அதைத் தின்றுவிடுமோ அதே போல் சில சந்தர்ப்பங்களால் நம் நல்ல குணங்கள் பாழாகிவிடுகிறது


சந்தர்ப்பத்தால் ஏற்படும் குறைகளை நிவர்த்திக்கும் பழக்கத்திற்குத்தான் நாம் மாற வேண்டுமே தவிர
1.கஷ்டம்... கஷ்டம்...! என்று எண்ணி
2.அத்தகைய சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கவே கூடாது.

எங்கள் தொழில் வளர வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிப் பழக வேண்டும்.

நாம் தொழில் செய்யும் இடத்தில் உதாரணமாக ஒரு கெட்டவன் வந்து நம்மிடம் வேலை செய்கின்றான்... என்று வைத்துக் கொள்வோம்.

அவன் வேலையைப் பார்க்கும் பொழுது திருடனாக இருக்கின்றான் என்று தெரிந்து கொள்கிறோம். அப்பொழுது அவனை நாம் “திருடன்...” என்று சொல்ல வேண்டியது இல்லை.

1.நீ எங்கேயாவது போய்... நல்லவனாக இருந்து கொள்
2.நீ நல்லது செய்...! என்று சொல்லி அவனை வேலையை விட்டுப் போகச் சொல்லி விட வேண்டும்.
3.ஏனென்றால் அவன் திருடன் என்று ஒரு தரம் பார்த்துவிட்டோம் என்றால்
4.அந்த உணர்வே அங்கே வளர்ந்து கொண்டு இருக்கும்.

அடுத்தாற்போல இவன் மோசமானவன் என்று இன்னொருவரிடம் சொல்வான். பின்னாடி அவனும் இவன் செய்வதைச் செய்ய ஆரம்பிப்பான்.

திருடன் என்று நாம் தெரிந்து கொண்டோம். நீ செய்வது தவறு. இருந்தாலும் உன் தவறைத் திருத்திக் கொள். நல்லபடியாக நடந்து கொள். உன் எதிர் காலம் நன்றாக இருக்கும் என்று நல்ல வழியைக் காட்ட வேண்டும்.

அப்போது அதில் அவன் திருந்தவில்லை என்று சொன்னால் “நீ எங்கேயாவது நல்ல வழியாகப் பார்த்துப் போப்பா...!” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து விட வேண்டும்.

1.கட்டுச் சோற்றுக்குள்ளே எலியைக் கட்டி வைத்தோம் என்றால் என்ன செய்யும்..?
2.இருக்கின்ற சோற்றை எல்லாம் அது தின்றுவிடும்.
3.அவனை எண்ணித் “திருடன் திருடன்...! என்று நாம் சொல்லும் போது
4.நம் நல்ல குணங்கள் எல்லாம் தின்று கொண்டே இருக்கும்.
5.நம் நல்ல குணங்கள் அனைத்தையும் அவனின் தவறான உணர்வுகள் மாற்றிவிடும்.
6.நம்முடைய செயல்களும் மாறிவிடும்.

நம் வாழ்க்கையில் ஏற்படும் சில சில சந்தர்ப்பங்களால் நமக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றது...? எதனால் நம் செயல்கள் மாறுகின்றது...? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்வது.

ஒரு நோயாளியைச் சந்திக்கின்றீர்கள். அவருடைய நோய் போக வேண்டும் என்று வெறுமனே எண்ணாதீர்கள். மகரிஷியின் அருள் சக்தி அவர் பெற வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்போது மகரிஷிகள் உணர்வுகள் அவருக்குள் வளர தீமைகள் விலகிப் போகும். நல்ல தண்ணீரை ஊற்றியவுடனே அங்கே இருக்கக்கூடிய அழுக்குகள் போகும். இது ஒரு பழக்கத்திற்கு நாம் வந்து விட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தை போதித்தாரோ அதைப் போன்று தான் உங்களுக்கும் ஒவ்வொரு சமயத்திலும் போதிக்கின்றோம்.

1.ஞானிகளின் உணர்வை எடுத்துக் கொண்டால்
2.உங்கள் வாழ்க்கையில் அந்தந்த நேரங்களில் அதுவே உங்களுக்கு வழிகாட்டும்.
3.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்.

தவறு செய்தார்கள் என்றால் அந்தப் பொருளை நாம் காண முடியும். அப்பொழுது இருளைப் பிளக்கின்றது. பொருளைக் காணச் செய்யும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கம் வந்துவிட்டால் நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் இருளைப் பிளக்கும். இதைப் போல சிறிது காலம் கடைப்பிடியுங்கள்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. ஐயோ...! நச்சுத் தன்மையாக இருக்கின்றது என்று பதிவு செய்து விட்டோம் என்றால் அடுத்தாற்போல் நம் உடலிலும் நச்சுத் தன்மை வரும்.

மகரிஷிகள் அருள் சக்தி இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர வேண்டும். எல்லோரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்று இதை எண்ணி நீங்கள் பரப்பிக் கொண்டே வாருங்கள்.

அந்த மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் வர வேண்டும். "குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக மாற்றும் நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்...!"

No comments:

Post a Comment