Thursday, 13 February 2020

தீமைகளை நீக்க “வலுவான சக்திகளை” நாம் எடுத்துப் பழக வேண்டும்


யாகத்தைச் செய்து மந்திரங்களைச் சொல்லி பொருள்களையும் சோமபானத்தையும் தீயில் போட்டு அந்த உணர்வை எல்லாம் ஏற்றினால் தீமைகள் போய்விடும் நோய் போய்விடும் என்று சொன்னால் எப்படிப் போகும்…?

இன்னும் கொஞ்சம் தீமையைச் சேர்த்துக் கொள்கின்றமே தவிர தீமை போகாது.

அந்த மந்திரத்தைச் சொல்லும் பொழுது இன்னொரு மனித உடலிலிருந்து விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் பதிவாகும். ஒரு ஆவியின் தொடர்பை நாம் வளர்த்துக் கொள்கின்றோம்.

மந்திரம் சொல்லி ஜெபித்து நோய் போய்விடும் என்று சொன்னால் கொஞ்ச நேரத்திற்கு வெயிலுக்குக் குடை பிடித்த மாதிரி தான் அந்த நிலை. அதனால் நமக்கு நல்ல பலன் இல்லை.

நோயை நீக்க வேண்டும் என்று மருத்துவரிடம் போகின்றோம். அவர் கொடுக்கும் (இங்கிலீஷ்) மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் மருந்து அதிகமாக அதிகமாக என்ன செய்கின்றது…?

நோயை நீக்கினாலும்… அதையே மடக்கிப் போட்டு அது முன்னாடி வந்துவிடுகிறது. பிறகு இது அதிகமாகிப் போனதென்றால் இதை மாற்றுவதற்கு வேறோரு மருந்தைச் சாப்பிட வேண்டும்.

எப்பொழுதுமே இந்த உடலை விட்டு போகத்தான் போகிறது நம் உயிர். ஆனால் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்த மகரிஷிகளின் சக்தியைப் பெறுகின்றோம் என்பதற்காக வேண்டித் தற்காலிகமாகச் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் தவறில்லை.

நம்மால் எண்ணத்தால் எண்ண முடியவில்லை. அந்த நேரத்தில் சில மருந்துகளைச் சாப்பிட்டுக் கொஞ்சம் வலு கூட்டி நம் எண்ணத்தை மீண்டும் வலு கூட்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும்.

வாய்க்காலில் தண்ணீர் போகிறது. திடீரென ஒரு பக்கம் உடைப்பு எடுத்தால் என்ன செய்ய முடியும்…? மறுபடியும் மண்ணைப் போட்டீர்கள் என்றால் நிற்குமா…? மண்ணைப் போடப் போட மண்ணைக் கரைத்து கொண்டே போகும்.

அப்போது மண்ணை மூட்டையாகக் கட்டி அந்த மூட்டையுடன் ஒன்றோடு ஒன்று இணைத்துப் போட்டு விட்டோம் என்றால் நின்று விடுகிறது. பிறகு மண்ணைக் கொட்டிச் சீராக்க முடியும். அடைப்பை முழுவதும் நிறுத்த முடியும்.

ஆகவே நம் உயிரை ஈசன் என்ற நிலையில் மதிக்க வேண்டும். ஈசன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் உடல் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதாவது
1.“உயிரால் தான் உருவாக்கப்பட்டது...!” என்று
2.அவனை முதன்மையாக் கருதி நாம் மதித்துப் பழக வேண்டும்.
3.நம் உடலையும் கோவிலாக மதிக்க வேண்டும்.
4.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் காக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் அருள் சக்திகளைச் சுவாசித்தே ஆக வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

நீங்கள் நினைத்தவுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறுவதற்கே இதைப் பதிவாக்குகின்றோம்.

No comments:

Post a Comment