Saturday, 1 February 2020

இந்தப் பிறவிக் கடலிலிருந்து மீண்டு நாம் கரையேற வேண்டிய… கரையேற்ற வேண்டிய எல்லை... “அந்தத் துருவ நட்சத்திரம் தான்…!”


இன்று நாம் கடலிலே செல்கிறோம் என்றால் கடல் அலைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.

நாம் எதை எல்லையாக வைத்துப் போக வேண்டும் என்று எண்ணுகிறோமோ அந்த எல்லை வரையிலும் நாம் நீச்சலடித்து அலைகளைப் பிளந்து தான் செல்கின்றோம்.

இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் பல விதமான உணர்வுகள் அலை அலையாக நம்மைத் தாக்கிக் கொண்டேதான் உள்ளது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து
2.அதுவே நமது எல்லை என்ற உணர்வை வளர்த்து
3.இந்த வாழ்க்கையில் வரும் அலைகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்துத் தணித்து
4.பேரருள் உணர்வைப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்  வழி.

செல்வத்தைத் தேடிய பின் செல்வங்கள் இருப்பினும் நமது உணர்வின் தன்மை ஆசையால் நமது சகோதரர்களுக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ பல உதவிகளைச் செய்கின்றோம்.

நாம் அவர்களுக்கு உதவி செய்திருந்தாலும் அவர்கள் நமக்குத் தேவையான நேரத்தில் சரியான நிலைகளில் உதவிக்கு வரவில்லை என்றால் அவர்களை எண்ணி வேதனைப்படுகிறோம்.

அந்த வேதனை என்ற விஷத் தன்மையை நாம் கவரப்படும் போது
1.நமக்குள் கடும் நோயாகின்றது.
2.சகோதரர்களுக்குள் நண்பருக்குள் எதிரியாகின்றது… பகைமையே உயருகின்றது.
3.நல்ல பண்புகள் அங்கே அழிக்கப்படுகின்றது.
4.பரிவற்ற செயலும் அங்கே உருவாகின்றது.
5.கொலை செய்வதற்கே அடிப்படையாக வந்து விடுகின்றது.
6.அவர்களைத் துன்புறுத்துவதே வேலை என்ற நிலைகளில்
7.ஒருவருக்கொருவர் இத்தகைய நிலைகள் உருவாகிறது.

இதை இல்லை… என்று யாரும் மறுக்க முடியுமா…?

ஒரு குடும்பமானாலும் ஒரு வீடானாலும் இதைப் போன்ற நிலைகள் தான் நமக்குள் உருவாகின்றது. இதை மாற்றிடத்தான் பிறவி இல்லா நிலை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

இதனை அவ்வப்போது நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
1.அந்த உணர்வு உங்களுக்குத் தக்க நேரத்தில் நல் வழி காட்டும்.
2.மன வலிமையைக் கூட்டும்.
3.தீமைகளை அகற்றும் உணர்வை ஊட்டும்.
4.அதன் வழி உங்களை வழி நடத்தும்... அதன் வழி வாழவும் அந்த உணர்வுகள் உங்களுக்கு உதவி செய்யும்.

இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!

எனக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறானே… பதிலுக்கு அவனுக்கு எப்படியும் நாம் தொல்லை கொடுக்க வேண்டும்…! என்று இச்சைப்பட்டால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்த இச்சையின் தன்மைகள் நம் உடலுக்குள் சென்று அது கிரியை ஆகி அந்த உணர்வின் செயலாக அவனுக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வுகளே வளருகின்றது.

தொல்லை கொடுக்கும் உணர்வுகள் கிரியை ஆகி நமக்குள் நல்ல அணுக்களை மாற்றித் தீமையின் உணர்வின் வேகத்தைக் கூட்டிவிடுகின்றது.

தீமையின் வேகம் கூடக் கூட… உடலிலுள்ள நல்ல அணுக்கள் மடிந்து இந்த உடல் நலிந்து… நலிந்திடும் உணர்வுகள் பெருகப் பெருக எந்த உணர்வின் விஷத் தன்மையைப் பெருக்கினோமோ அந்த இச்சைப் பிரகாரம் கிரியையாகி அந்த ஞானத்தின் பிரகாரம் இந்த மனித உடலையே மாற்றுகின்றது.

ஒருவனைக் கொல்ல வேண்டும் என்றோ ஒருவருக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வின் தன்மை அதனின் ஞானமாக நம்மை இயக்கி இந்த உடலுக்குப் பின் மாற்று உடலாக மற்றொன்றைக் கொன்றிடும் மிருகமாக நமது உயிர் நம்மை உருவாக்கி விடும் என்பதனை மறந்திடலாகாது. ஆகவே
1.நமது வாழ் நாளில் எத்தகைய நிலை இருப்பினும்
2.குறுகிய காலம் வாழும் இந்த உடல் வாழ்க்கையில் அருள் உணர்வைப் பெற்று
3.நம்மை அறியாமல் இயக்கும் இந்த உணர்வுகளைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.

நம் சட்டையில் அழுக்கு பட்டால் அது ஒன்றும் செய்வதில்லை. ஆனால் மிளகாய்த் தூள் நம் சட்டையில் பட்டு அந்தத் தூசியின் அழுக்கானால் நாம் சட்டை போட்டுக் கொண்டிருக்கும் போதே எரிச்சலாகின்றது.

தும்மல் வருகின்றது. அதை உடனே சுத்தப்படுத்தவில்லை என்றாலோ அல்லது மாற்றவில்லை என்றாலோ என்ன செய்யும்…? அது மீண்டும் மீண்டும் தும்மலாகி எரிச்சலைத்தான் உண்டாக்கும்.

இதைத் போல தான் நமது வாழ்க்கையில் நமது ஆன்மாவில் இத்தகைய தீமைகள் சேர்ந்து விட்டால் அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் உள் செலுத்தி அந்த வலிமையின் துணை கொண்டு இதைப் பிளத்தல் வேண்டும்.

மடி மீது இரண்யனை வைத்து வாசற்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரங்கள் இதனைத் தெளிவாக்குகின்றது.

உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பதிவாக்கிக் கொண்டால் அதனை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எந்த நேரமும் எடுக்கலாம். அது இங்கே பூமியில் படர்ந்துள்ளது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் அதிகாலையில் மிகவும் அடர்த்தியாக நம் பூமிக்குள் வருகின்றது. அந்த நேரத்தில் அதை அதிகமாகச் சேமித்து உங்களுக்குள் வலு பெறச் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்குத் துயர் என்ற நிலைகள் எந்த நேரத்தில் வந்தாலும் ஈஸ்வரா என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்தித் தீமை என்ற நிலைகள் அகற்றிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கிரியையாக்கி உங்கள் எண்ணம் சொல் செயல்களைத் தெளிவாக்கி வாழ்க்கையைச் சீர்படுத்தித் துன்பங்கள் புகாது தடுத்துப் பேரருளை நமக்குள் பெருக்கச் செய்வதுதான் குருநாதர் உணர்த்திய அருள் வழி.

கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்த வேண்டும். நம் உடல் எப்படி நஞ்சை மலமாக மாற்றுகிறதோ அதைப் போல ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமை என்ற நிலைகளை மாற்றிடல் வேண்டும்.

1.சமையல் செய்யும் பொழுது நாம் எல்லாவற்றையும் வேக வைத்து
2.பல பல பொருள்களை அதனுடன் சேர்த்துச் சுவையாக்குவது போலத்தான்
3.பேரருள் என்ற உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்தி
4.தீமையை நீக்கிவிட்டு அந்த அருள் ஒளிச் சுடராக நாம் மாற வேண்டும்.

எங்கள் சொல் செயல் புனிதம் பெற வேண்டும். எங்கள் செயல் அனைத்தும் போற்றும் தன்மை பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைகின்றது.

இது நம் இரத்தங்களில் கலக்கின்றது. நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் “மகிழ்ச்சி…” என்ற உணர்வை ஊட்டுகின்றது.

No comments:

Post a Comment