Thursday, 27 February 2020

உடலுக்குள் பித்தம் எதனால் அதிகமாகின்றது...? அதிகமானால் ஏற்படும் விளைவுகள் என்ன...? அதைத் தடுப்பது எப்படி...?


 குடும்பத்தில் மனைவி குழந்தை மேல் அன்பிருந்தாலும் அந்த அன்பு கொண்ட நிலையில் சிறிது குறைகள் வந்து விட்டால் மகிழ்ச்சி இல்லாது போகின்றது.

அதற்கு என்ன காரணம்...?

கணவன் தொழிலின் நிமித்தம் வெளியிலே வெறுப்படைந்தால் அதே உணர்வு தாக்கப்பட்டு மனைவி மீதும் வெறுப்படையும் தன்மை வருகின்றது.

வெறுப்பான உணர்வுடன் வீட்டுக்குள் வரப்படும் போது மனைவி ஆகாரத்தைச் சுவையாக செய்து வைத்திருந்தாலும் சுவையான உணவை ரசித்து சாப்பிடும் நிலை இழக்கப்படுகின்றது.
1.அப்போது சோர்வடைந்து “என்ன சாப்பாடு இது...?”
2.வெளியிலேயும் ஒரே சிக்கலாக இருக்கின்றது...
3.நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாரித்தாலும் கூட
4.வீட்டில் சாப்பாடு கூட மோசமாக இருக்கிறது என்று
5.இப்படிக் குறையான உணர்வுகளைச் சுவாசித்து
6.நம்மை அறியாமலே அன்பு கொண்ட மனைவியும் கூட வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் நாம் அல்ல....!

நாம் எடுத்து கொண்ட நல்ல உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் அது மறைக்கப்படும் போது விஷம் கலந்த அமிலங்கள் கலக்கப்படும் போது சுவை மிக்க உணவை ருசி இல்லாத நிலைகளாக மாற்றி விடுகின்றது.

பித்தம் அதிகமாகிவிட்டால்... நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வரும். ருசியான உணவை நீங்கள் உட்கொண்டாலும் அதை உங்கள் உடல் ஏற்க  மறுக்கின்றது. உடல் வலு பெற வேண்டும் என்றாலும் முடியாத நிலை செய்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் தான்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாறி வாயிலே அதற்குத் தகுந்த அமிலமாக (உமிழ் நீராக) மாறுகின்றது.

அந்த உமிழ் நீர் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அந்த  உணர்வுக்கொப்ப தான் (உமிழ் நீர்) தான் ஜீரணிப்பதும் ஜீரணமற்ற நிலை உருவாவது.

சலிப்பும் சஞ்சலமுமாக இருக்கும் பொழுது நல்ல சுவையான உணவை நீங்கள் உட்கொண்டால் ஜீரண சக்தியே குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து வரும் நிலையில் நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் வலு பெற வேண்டும் என்று எண்ணிச் சாப்பிட்டாலும்
1.சலிப்பு சஞ்சலம் என்ற உமிழ் நீர் கலந்து
2.ஜீரணிக்கும் சக்தியை இழந்து புளித்த ஏப்பம் வரும்
3.புளித்த ஏப்பம் வந்த பின் வாய்வாகி வயிறு உப்பிசமாகும்
4.வயிறு உப்பிசமாகி வாயுவின் தன்மை நுரையீரல்களில் அதிகமாகி மூச்சுத் திணறல் போன்று வரும்.
5.நமக்கு ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா...? என்றால் இல்லை.

கடைசியில் குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் இருக்கும் அன்பைக் குறைத்து மகிழ்ச்சியைக் குறைக்கச் செய்து நம் உடலையும் நலியச் செய்து விடுகிறது.

இதைப்போல சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்திக் காட்டினார்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றிட என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறு குடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து சிறு குடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.....! என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்த ஜீரண உறுப்புகள் பலவீனமடையாதபடி உற்சாகப்படுத்தி
3.சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும்
4.ஆகாரத்தில் உள்ள சத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதைப் போன்று நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுது சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளை நம் உடல் உறுப்புகள் வடிகட்டும் திறன் பெறும். நல்ல உமிழ் நீராகச் சுரக்கச் செய்யும். சாப்பிடும் ஆகாரமும் சுவையுள்ளதாக மாற்றிவிடும்.

உடல் நலம் பெறுவோம். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவோம்.

No comments:

Post a Comment