Tuesday 11 February 2020

காயத்ரி - சூரிய நமஸ்காரம்…!


1.நமக்கு முன்னாடி இந்தக் காற்று மண்டலமாகப் பரவி இருப்பது பரமாத்மா.
2.அந்தப் பரமாத்மாவிலிருந்து நாம் நினைத்து எடுப்பது ஆத்மா.
3.நம் உடலுக்குள் சென்று அணுவாக ஜீவன் பெறும் பொழுது ஜீவாத்மா.
4.உடலுக்குள் விளைந்த உணர்வின் சத்துக்கள் வடிந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உயிராத்மா.
4.இதற்குப் பெயர் காயத்ரி.

உதாரணமாக சோளத்தை நாம் விதைக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வித்தின் தன்மை பூமிக்குள் இருக்கப்படும் போது பூமியின் இயக்கச் சக்தியான காந்தத்தின் துணை கொண்டு அது இயங்கத் தொடங்குகிறது.

அவ்வாறு ஈர்க்கும் சக்தி பெறும் போது அந்தச் சோளம் எந்தச் சக்தியால் உருவானதோ தன் இனமான உணர்வின் சத்தைப் பரமாத்மாவிலிருந்து தனது ஆத்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

சோளம் முளைத்துச் செடியாக வரும் போது அதன் அருகிலே நாம் சென்றால் “சோளத்தின் வாசனை…” வீசுகின்றது.

ஆனால் அதே சமயம் ஈர்க்கும் காந்தம் தனக்குள் இணைத்து அந்தச் சக்தி உள்ளுக்குள் விளையப்படும் போது அது ஜீவன் பெறுகின்றது.

செடியாக விளைந்த ஜீவனின் நிலைகள் அதாவது அந்த வித்தின் தன்மை எதுவோ அதன் சத்தின் தன்மைகள் தனக்குள் கூடி விளைந்தபின் பல சோள வித்துக்களாக அந்த வினையாகத் தனக்குள் அது விளைய வைக்கின்றது. அவ்வாறு முழுமை பெறுவதைத்தான் காயத்ரி என்று சொல்வது.

காயத்ரி மந்திரத்தை சொன்னால் எல்லாச் சக்தியும் கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். காயத்ரி என்பதை “எத்தனை காயத்ரி…?” என்று உணரவில்லை.

காயத்ரி என்றால் “பிரம்மம்…!” என்று சொல்கின்றார்கள். பரமாத்மா ஆத்மா ஜீவத்மா உயிராத்மா என்று சொல்வதைக் காயத்ரி மந்திரத்தில் “நான்கு” என்று நான்கு தலைகளை வைத்து அந்தச் சக்தியைக் காட்டுகின்றார்கள்.

அதனுடைய முழு உண்மையைத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் இல்லை. அன்று ஞானிகள் இயற்கையின் செயலாற்றலை அது எவ்வாறு என்ற நிலைகளை காயத்ரி என்கிற போது அதைச் “சூரிய நமஸ்காரம்…! என்று சொல்கிறார்கள்.

1.சூரியனின் காந்த சக்தியைத் தனக்குள் எடுத்துத்தான்
2.ஒவ்வொன்றும் வளர்வதைச் சூரிய நமஸ்காரம் என்று
3.சூரியனின் சக்தியைப் பெறக்கூடிய தகுதி என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள். 

ஒரு தென்னை மரம் அது காயத்ரி மந்திரத்தைத் தான் ஜெபிக்கின்றது. எப்படி…?

அந்தத் தென்னை மரம் தன் அருகிலே மற்ற அடர்த்தியின் தன்மைகள் வரப்படப் போகும் போது அந்த இடத்தில் தன் இனமான சத்துக்களை ஈர்க்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

தனக்குத் தேவையான சூரியனுடைய காந்த சக்தி கிடைக்காதபடி தடைப்படுத்தப்படும் பொழுது
1.உடனே அந்தத் தென்னை மரம்
2.காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்து விடுகிறது.

சூரியனை நோக்கி அந்த மரம் வளைந்து அந்தக் காந்தத்தைத் தனக்குள் பெற்று அந்த காந்தத்தின் ஆற்றல் கொண்டு காற்றில் இருக்கக்கூடிய தன் இனத்தின் சக்தியைத் தனக்குள் எடுத்து மீண்டும் செழிப்பாக வளர்கின்றது.

தன் சக்தியைப் பெறுவதற்காக அந்த மரம் வளைந்து நெளிந்து அதுவும் “சூரிய நமஸ்காரம்…!” செய்கிறது.

காயத்ரி என்றால் எந்தக் காயத்ரியைச் செயல்படுத்த வேண்டும் என்ற பொருள் வேண்டும் அல்லவா….!

1.பூமியில் இருக்கும் எண்ணிலடங்காத சக்திகள் அனைத்துமே
2.சூரியனின் காந்தத் தொடர் கொண்டு தான்
2.தன் உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
3.எந்தக் காந்தத்திற்குள் இணைந்து இருக்கின்றதோ - இயக்கச் சக்தி மோதும் போது
4.ஒன்றுக்குள் ஒன்று ஈர்க்கும் சக்தி இருக்கிறது.

தனக்குள் இருக்கும் காந்த சக்தியால் அதை ஈர்த்துத் தனக்குள் மோதும் தன்மை வரும் போது வெப்பமாகின்றது. வெப்பத்தின் நிலைகள் கொண்டே தனக்குள் ஐக்கியமாகின்றது.

ஈர்க்கும் சக்தியான காந்தம் என்பது இலட்சுமி. வெப்ப காந்தம் என்பது அது ஈர்த்துத் தன்னுடன் உராயப்படும் போது வெப்பமாகி “பராசக்தி” என்ற நிலைகள் ஏற்படுகின்றது.

வெப்பம் ஏற்படும் போது அந்த வெப்பத்தினால் மீண்டும் ஈர்க்கும் காந்தமாகித் தனக்குள் எடுத்துக் கொண்ட சத்தை இரண்டற இணைத்துக் கொண்டால் அது காயத்ரி ஆகின்றது.

தனக்குள் ஆற்றல் மிக்க சக்தியாக அது இணைந்து கொள்கிறது. ஆகவே காயத்ரி என்று முழுமை அடைந்த நிலையாக வரும் பொழுது அந்த உணர்வின் சக்தி “பிரணவமாகின்றது…!” அதாவது அடுத்ததாக ஒரு ஜீவன் பெறும் சக்தியாக உருவாகின்றது.
இதைப் போலத்தான்
1.நாம் எந்தெந்த குணங்களை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோமோ
2.அந்தந்தக் குணத்தின் சக்திகளே முழுமையாக நமக்குள் அது வளரும் ஆற்றல் பெறுகின்றது என்ற
3.இந்த உண்மையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக
4.”காயத்ரி – சூரிய நமஸ்காரம்” என்று அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.

No comments:

Post a Comment