Thursday, 13 February 2020

இன்றைய தினசரி வாழ்க்கையில் உடலைக் காக்க வேண்டும் என்று பாடாய்ப்படுகின்றோம்…! உயிரைக் கொஞ்சமாவது நினைக்கின்றோமா… மதிக்கின்றோமா… வணங்குகின்றோமா…?


உயிரைப் பற்றிய சிந்தனை எப்பொழுது வருகிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்….!

வாழ்க்கையின் “கடைசி நேரம்” மட்டும் தான் உயிரைப் பற்றிய எண்ணமே வரும். மற்ற எல்லா நேரங்களிலும் உடலைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே இருக்கின்றது.

உடலை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட எண்ணுவது கிடையாது.

அது போக நாம் இன்று வழக்கில் பேசும் பேச்சு எப்படி இருக்கிறது என்று பார்த்தால்…,
1.உயிர் இருக்கிறதா இல்லையா என்று பார்…!
2.உயிரையே விடுகின்றான்…!
3.உயிர் போய் விட்டது...! என்று
4.உயிரை ஒரு செல்லாக் காசாகத்தான் நாம் வைத்திருக்கின்றோம்…!

இதை எப்படிச் சொல்ல வேண்டும் என்றால்
1.உடலுடன் நாம் இருக்க முடியுமா என்று பார்…!
2.உடலை விட்டுப் பிரிய வேண்டியது தான்…!
3.உயிருடன் ஒன்றி அவனுடன் விண்ணுலகம் செல்கிறேன்
4.உயிரைப் போல அழியாது என்றுமே ஏகாந்தமாக நான் வாழப் போகிறேன் என்று சொல்ல வேண்டும்.

மதிக்கப்பட வேண்டியது நம் உயிர் தான்.

ஆனால் நாம் உடலிலிருந்து உயிர் பிரிந்தபின் முதலில் சொன்ன மாதிரி “சரி உயிர் போய்விட்டது.. அதை நாம் விட்டுவிடுவோம்….!”

உயிரில்லாத இந்தச் சவத்திற்கு எல்லாவிதமான மரியாதையையும் செய்வோம் என்று மண்ணுடன் மண்ணாக சாம்பலாகப் போகும் சவத்தைப் பாதுகாத்துக் கொண்டுள்ளோம்.

எந்த ஞானியும் மகரிஷியும் உடலுடன் இல்லை. சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்களும் உடலுடன் இல்லை. உலகை ஆட்டிப் படைத்த அரசியல் தலைவர்களும் உடலுடன் இல்லை.

இந்தப் பேருண்மைகளை உணர்ந்த ஞானிகள் இதை எல்லோருக்கும் புரியும் நிலைக்காகச் “சத்தியவான் சாவித்திரி” என்ற காவியத்தைக் காட்டினார்கள்.

1.நம் உயிரே சத்தியம். சத்தியவான்…!
2,உயிருடன் என்றுமே நாம் ஒன்றியே வாழ வேண்டும்.
3.உயிரை விட்டுவிடக் கூடாது என்பதே ஞானிகள் காட்டியது.

ஆனால் அந்தக் காவியத்தின் உட்பொருளை “உடலை விட்டு உயிர் பிரியக் கூடாது…!” (இறக்கக் கூடாது) என்று திசை திருப்பி விட்டார்கள்.
1.யாரும் இறப்பதில்லை

2.உடல் தான் இறக்கின்றது

3.உணர்வுகள் அழிவதில்லை

4.உணர்வுகள் மாறுகின்றது

5.உணர்வுகள் மாறிக் கொண்டேயிருக்கும்

6.உணர்வுக்குத் தக்கவாறு உடல்கள் மாறும்
7.உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக ஆவதே மகரிஷிகள் உணர்த்திய “வேகாக்கலை...!”

இன்று செய்யும் நோன்பு விரதம் எல்லாமே சிறிது காலத்திற்கு இந்த உடலைக் காக்கத்தான்...!

சாதாரண மனிதனும்... “உயிருடன் ஒன்றிய ஒளியாக ஆக வேண்டும்...” என்ற நிலைக்குத்தான் காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் படைத்தார்கள்.

ஆனால் அதைச் சாங்கிய சாஸ்திரமாக மாற்றி “அதைச் செய்யவில்லை என்றால்... தெய்வத்திற்கு ஆகாது...! என்ற நிலையில் நம்மைச் சிறிதும் சிந்திக்க விடாது சூனியமாக்கி விட்டார்கள்.

ஞானிகள் காட்டிய பேருண்மைகளை இன்று எடுத்துச் சொல்வதற்கும் ஆள் இல்லை. சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் யாரும் இல்லை.

உடலுக்குப் பின் என்ன..? நாம் எங்கே போகிறோம்..? என்ற எண்ணமே இல்லை. அது தேவையில்லை..! ஏனென்றால் அது யாருக்கும் தெரியாது... அதனால் உடலுடன் இருக்கும் வரையிலும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்...! அவ்வளவுதான்.

இது தான் இன்றைய வழக்கில் உள்ளது. யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது தான் உண்மை.

No comments:

Post a Comment