நல்லது நடக்க வேண்டும் என்றால் அதை எப்படிக் கேட்க வேண்டும் என்று பல முறை சொல்லி இருக்கின்றேன் (ஞானகுரு).
என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். என் பையன் உடலுக்கு நன்றாக இருக்க வேண்டும். என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். விவசாயம் நன்றாக இருக்க வேண்டும். பார்ப்போர் நலமாக இருக்க வேண்டும். இப்படி உங்களால் கேட்க முடியாதா..?
ஏனென்றால் நீங்கள் கேட்கக்கூடிய உணர்வுகள் எதுவோ உயிரில் பட்டவுடனே அந்த உணர்ச்சிகள்தான் உங்களை ஆளுகின்றது. அதுவே உங்கள் உடலில் இயங்குகின்றது. உங்கள் உடலில் பதிவாகின்றது. அதனின் செயல்தான் படுகின்றது.
ஒருவர் மிகுந்த வேதனையுடன் சிரமப்படுகின்றார் என்பதைப் பார்த்துவிட்டு அடுத்து எந்தக் காரியத்தைச் செய்தாலும் சிந்தனை இல்லாது போய்விடுகின்றது.
ஒருவன் நம்மிடம் கோபத்துடன் பேசிக் கொண்டு இருந்தான் என்றால் அந்தக் கோபமான உணர்வுகளை நுகரப்படப் போகும் போது அதே மாதிரி சிந்தனை இழந்துவிடுகின்றது.
அந்த உணர்வுடன் ஒரு ரோட்டிலேயே நடந்து போனால் சிந்தனை இழந்த நிலையில் மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுவார்கள்.
ஒரு வியாபாரத்திற்கே போகின்றோம் என்று சொன்னால் அந்த வியாபாரத்தைச் சரியான முறையில் கவனிக்க முடியாது.
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதால் “தீமைகளை எண்ணுவதை முதலில் மறந்து பழகுங்கள்…!” என்று அடிக்கடி சொல்கின்றோம்.
சாமி காப்பாற்றும்... சாமியார் காப்பாற்றுவான்... ஜோசியம் காப்பாற்றும்.... ஜாதகம் காப்பாற்றும்... மந்திரம் காப்பாற்றும் என்று சொல்வதெல்லாம் எதுவும் உங்களைக் காப்பது இல்லை.
ஜோசியக்காரன் உங்களுக்குக் கஷ்டம் இருக்கிறது.. உங்கள் ஜாதகத்தில் கண்டம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு தான் இருப்பான். அதைப் பதிவு செய்து கொண்டால் இதைத்தான் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது வரும்.
1.அவன் எடுத்து கஷ்டத்தின் உணர்வைச் சொல்வான்
2.நீங்கள் கேட்கும் போது உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகள் உங்களை ஆளத் தொடங்கும்.
3.அவன் சொன்ன கஷ்டத்தைத் தான் நீங்கள் அனுபவிக்க வேண்டும்.
ஆனால் மனிதனுடைய ஆறாவது அறிவை முருகனாகக் காண்பித்து “ஓ..ம்..” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் என்று சிவ தத்துவத்தில் கூறப்படுகிறது.
ஒரு மனிதன் வேதனைப்படுவதைக் கண்ணில் பார்க்கின்றோம். பார்த்தவுடனே அந்த உணர்வு “ஓ...ம்” என்று நமக்குள் பிரணவமாகி “ம்..” என்று அதை நம் உடலாக்குகின்றது. (திடப்பொருள் உடல் - சிவம்).
இந்த உடலில் விளைந்தது தான் ஆறாவது அறிவு. ஒரு நோயாளியைப் பார்த்து அந்த வேதனை என்ற உணர்வு நாம் நுகர்ந்தோமென்றால் அந்த வேதனையான உணர்வு உடலாகி அந்த வேதனையான சிவமாக மாறும்.
வேதனை நீக்கக்கூடிய உணர்வுகளை எத்தனையோ சரீரத்திலிருந்து பெற்று பெற்று
1.தீமை நீக்கக்கூடிய அறிவு ஆறாவது கொண்ட மனித உடல் பெற்ற நாம்
2.மீண்டும் மீண்டும் தீமைகளையே நமக்குள் இழுத்துக் கொண்டிருந்தால்
3.இதிலிருந்து என்றைக்கு நாம் மீள்வது...? என்றைக்கு நாம் தெளிவாகுவது...?
பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்....! ஓம் என்ற பிரணவத்திற்கே சிவனுக்கே ஓதினான்...” என்று சொன்னால் நம் ஆறாவது அறிவு என்ன செய்கின்றது...?
நோயாளியைப் பார்த்தவுடனே அந்த நோயின் உணர்வு வந்து நாம் வேதனைப்படுகிறோம். கோபப்படுகின்றவனைக் கேட்டால் நாமும் கோபப்படுகின்றோம்.
இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் வந்தால் இது பூராம் ஓ...ம் நமச்சிவாய..! ஓ...ம் நமச்சிவாய...! என்று இரத்தத்தில் அந்தக் கெட்டது பூராம் சேர்ந்து கொண்டே இருக்கும். இதை என்றைக்கு மீட்டுவது...?
இதிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லி எத்தனையோ தரம் நான் சொல்கிறேன். எம்முடைய உபதேசத்தைக் கேட்டவர்களும் சரி தெரிந்தவர்களும் சரி நான் மறந்து விட்டேன் என்று சொல்கிறார்கள்...!
நல்லதாக வேண்டும் என்று கேட்பதற்கு மனசு வராதா....?
1.எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்க மனது வராதா...?
2.எங்கள் பிள்ளைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று கேட்க மனது வராதா...!
3.என் பையன் எங்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்று கேட்பதற்கு உங்களுக்குத் தெரியாதா...?
ஒவ்வொரு நிமிடமும் நாம் எண்ணுவது தான் நம் உடலுக்குள் சேர்கின்றது. நீங்கள் வேதனையான உணர்வை எடுத்தால் அதை “ஓ..” என்று உயிர் இயக்கி உங்கள் இரத்தங்களிலே கலக்கச் செய்து விடுகின்றது.
உயிரிலே படும் போது ஈஸ்வர லோகம். நம் இரத்தத்திலே கலக்கும் போது இந்திரலோகம். அதாவது எந்தக் குணத்தை எடுத்தோமோ அதனின் அணுக் கருவாகிவிடுகின்றது.
திரும்பத் திரும்ப அதே வேதனையை எடுத்தோம் என்றால் நம் உடலில் கை கால் குடைச்சல் தலை வலி மேல் வலி சிந்திக்கும் தன்மை இழக்கக்கூடிய பிரம்மமாக மாறிவிடுகிறது.
ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினோம் என்றால் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சத்தை அது எடுத்துச் செடியாக விளைகின்றது
அதைப் போன்று தான் ஒரு வேதனையான உணர்வை எடுத்து நமக்குள் பதிவு செய்து விட்டால் அதைத் திருப்பி எண்ணும் போது அதே வேதனை உணர்வு தான் விளைந்து வருகின்றது.
வாழ்க்கையில் அடிக்கடி வேதனை...வேதனை கோபம்...கோபம் சஙகடம்....சங்கடம் சலிப்பு...சலிப்பு பையன் சொன்னபடி கேட்கவில்லை சொன்னபடி கேட்கவில்லை என்றால் கோபமும் வேதனையும் ஆத்திரமும் அதிமாகிக் கடைசியில் இரத்தக் கொதிப்பாகின்றது.
பையன் சொன்னபடி கேட்கவில்லை என்ற நிலையில் வேதனைப்பட்டாலும் நாம் அந்த வேதனையுடன் மீண்டும் அவனிடம் ஏண்டா இப்படிச் செய்கின்றாய் என்று சொன்னால் அவன் மீண்டும் கெட்டுப்போகத் தான் அந்த உணர்வு வழி வகுக்கும்.
உலகம் இப்படித் தான் இருக்கின்றது. நம்மை அறியாமல் தீய சக்திகள் நம்மை எப்படி இயக்குகின்றது..? அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று தான் உங்களுக்குச் சக்தியே கொடுக்கிறேன்.
எனக்கு நன்றாக இருக்க வேண்டும். என் உடம்பு நன்றாக இருக்க வேண்டும். என் குடும்பத்தில் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். என்று இதைக் கேட்க முடியாதா…?
என் வீட்டில் இடைஞ்சலாக இருக்கிறது. என் எதிர் வீட்டுக்காரன் அது செய்கிறான். இது செய்கின்றான் என்று இதைத்தான் முன்னால் எடுத்துக் கொள்கிறீர்களே தவிர
1.நல்லது பெற வேண்டும்
2.என் பார்வை நல்லதாக இருக்க வேண்டும்.
3.என் சொல் நல்லதாக இருக்க வேண்டும்.
4.அது மாதிரி சொல்வதற்கு யாரும் வருவது இல்லை.
எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் “ஓ…” என்று இயக்கி உங்கள் இரத்தத்தில் அது நிச்சயம் பதிவு செய்து விடுகின்றது.
அந்த இரத்தம் உங்கள் உடல் முழுவதும் சுழன்று வரப் போகும் போது உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களை எல்லாம் அது பாழாக்குகின்றது.
நல்ல பாதாமை போட்டு கல்கண்டைப் போட்டு நல்ல பாலைப் போட்டு ஒரு துளி விஷம் பட்டால் என்ன ஆகின்றது?
பாதாமிற்குச் சக்தி இருக்கின்றதா…? இல்லை. ஆக அந்த விஷத்திற்குதான் சக்தி இருக்கிறது.
நீங்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த குணங்கள் வைத்து இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வை நீங்கள் எடுத்தவுடன் இந்த இரத்தத்தில் கலந்து இந்த இரத்தம் உடல் முழுவதற்கும் போகின்றது.
அந்த வேதனை என்பதே விஷம்.
உங்கள் இரத்தத்தில் கலக்கப்படும் போது நல்ல குணங்கள் எல்லாம் செயலற்றுப் போகின்றது.
1.ஞாபக மறதி வருகிறது.
2.அடுத்தவர்களிடம் சிந்தித்து பேசத் தெரியவில்லை.
நீங்கள் வேதனைப்பட்டுச் சமையல் செய்தால் என்னவாகும்?
சரியான முறையில் அடுப்பில் வேலை செய்யும் போது கவனக் குறைவாக கட்டையை வைத்துத் தள்ளுவதற்கு பதில் கையை வைத்துத் தள்ளுவீர்கள். தீ கையைச் சுட்டுப் போய்விட்டது என்பீர்கள்.
இது எல்லாம் எதை காட்டுகின்றது…?
நம்முடைய வேதனை உணர்வுகள் நம் சிந்தனையைக் கலைத்துவிடுகின்றது. ஏனென்றால் கெட்ட காலம் வந்தால் ஜோசியக்காரன் ஏதாவது சொல்லியிருப்பான். அந்த வேதனையை எடுத்துக் கொள்கின்றீர்கள்.
அப்போது எனக்கு இந்த மாதிரிக் கஷ்டம் வந்தது என்று இதை எடுத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்களே தவிர கஷ்டத்தை நீக்குவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா…?
நீங்கள் எண்ணக்கூடிய எண்ணம்தான் உங்களை இயக்குகின்றது. அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசி கொடுத்து என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினையுங்கள் என்று ஆயிரம் தடவை பதிவு செய்கின்றேன்.
இதை நினைத்து உங்களால எடுக்க முடியாதா….? உங்களைக் காத்துக் கொள்ள முடியாதா….? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment