Wednesday 22 January 2020

போகர் தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியதன் “மகத்துவம்…”


பழனி கோவிலில் ஒரு தூப ஸ்தூபி. அதிலே அந்த அக்னியை ஒளியின் சுடராக வைத்துக் காட்டியிருப்பார்கள். விண்ணை நோக்கி ஏகி அந்த ஞானியின் ஒளியின் சுடரைப் பெறுவதற்காக அதை வைத்துள்ளார்கள்.

எந்த ஞானி (போகர்) காட்டினானோ இந்த உணர்வைச் செருகேற்றி நினைவாற்றலை விண்ணில் சேர்த்து அந்த மகா ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற காந்தப்புலன் அறிவைக் கூட்டச் செய்தார்கள்.

அந்த ஏக்க உணர்வுடன் நாம் மூலஸ்தானத்திற்குள் செல்லும் போது முருகன் சிலை மீது விழும் அந்த நீரின் தன்மையை உற்றுப் பார்க்கும்படி வைத்துள்ளார்கள்.

முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் மணத்தைச் சுவாசிக்கும் பொழுது அது நமக்குள் சென்று நம்மை அறியாது சேர்ந்த தீமைகளைப் பொசுக்குகின்றது.

ஆனால் முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் மணத்தை நுகர வேண்டும். இது மிகவும் முக்கியம்.
அதை நுகர்ந்து
1.நாம் பார்ப்போருக்கெல்லாம் இந்த நிலைகள் கிடைக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
3.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்திகள் எல்லோரும் பெற வேண்டும் என்று
4.இந்த உணர்வுகளை நாம் சுவாசித்தால் நம் உடலில் வந்த கடுமையான பிணிகளும் நீங்குகின்றது.
5.இதைத்தான் போகன் தனக்குள் நேசித்தான்... இந்த உணர்வைத் தனக்குள் பருகினான்
6.தன்னில் தன்னைத் தான் அறிந்தான்.. விண்ணின் நிலையை உணர்ந்தான்
7.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகினான்.
8.இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கிய உணர்வின் தன்மை கொண்டு மனிதன் உருவான நிலையை உணர்ந்தான்
9.மனிதனுக்குள் அறியாது வந்த தீமைகளை எப்படி நீக்குவது என்ற உபாயங்களை உணர்ந்தான்
10.அதனைத்தான் தண்டாயுதபாணியாக - சிலையாக வடித்து வைத்தான்... அருள் ஞானம் பெறச் செய்தான்
11.நஞ்சினை வென்றிடும் உணர்வினைச் சுவாசிக்கச் செய்து நமக்குள் தீய அணுக்களைக் கொல்லும் மார்க்கங்களைக் கொடுத்தான்.

போகன் எத்தனையோ கஷ்டப்பட்டு அந்தச் சிலையைச் செய்தான். அந்தச் சிலையின் மீது நீரை ஊற்றி ஆவியை வர வைத்து நம்மைச்  சுவாசிக்கச் செய்து தீமைகளை நீக்கும்படி செய்தான்.

இன்று யாரும் நாம் அதைச் செய்கின்றோமா...? சற்று சிந்தித்துப் பாருங்கள்...!

முருகன் நவபாஷாணச் சிலையை சுரண்டி மற்றவர்களுக்குக் கொடுத்தால் இவர்களுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கிடைக்கின்றது. அதைச் சுரண்டி எடுத்து வியாபாரம் செய்கின்றான்.

முருகனுக்குக் காவடி எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று இந்த வருடம் நேர்த்திக்கடன் வேண்டியிருந்தேன். ஆனால் இந்த வருடம் வரமுடியவில்லை என்பார்கள்.

கஷ்டம் என்று ஜோசியக்காரனிடம் போனால்... நீ நேர்த்திக்கடன் செய்யவில்லை... அதைச் செய்து விட்டு வா...! அப்போது தான் அந்த முருகன் உன்னைக் காப்பாற்றுவான் என்று உண்மைகளை அறியவிடாது செய்கின்றார்கள்.

ஏனென்றால் அன்று மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்...? தன்னை அறியாது வரும் தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்...? என்று அந்த உண்மைகளை வழிவகுத்தான் போகன்.

 நம் உயிரைக் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று நம் உடலைக் கோவிலாக மதித்தான் போகன். மனிதனை உருவாக்கிய குணங்களை அரும் பெரும் சக்திகள் என்று மதித்தான்.

மனிதன் மகிழ்ந்தால் அந்த மகிழ்ச்சியின் தன்மையைத் தான் பெற வேண்டும் என்று ஏக்கத்தில் தான் அவன் கண்டுணர்ந்த நிலையைச் சிலையாக உருவாக்கினான். 

முருகனைக் கண்டு எத்தனை பேர் மகிழ்ச்சி அடைகின்றனரோ அந்த மகிழ்ச்சியின் தன்மையை அந்த மகிழ்ச்சியான உணர்வின் சத்தை அவன் எடுத்துக் கொள்கிறான்.
மக்கள் வெளிப்படுத்தும் மகிழ்ந்த உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி
1.மெய் ஞான உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உயிராத்மா ஒளியாகி
3.விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைக் கண்டு கொண்டான்.

இது தான் போகன் செய்த நிலைகள்.

பழனி மலை மீது வைத்து போகனின் செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது...? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

அவர் உணர்த்திய உண்மைகளைத்தான் உங்களுக்கும் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

No comments:

Post a Comment